அமெரிக்க ஜனாதிபதியாக யார் பதவி ஏற்றாலும் எங்களுக்கு கவலையில்லை என வட கொரியா அரசு அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது.
வட கொரியாவில் நிகழ்ந்து வரும் மனித உரிமைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டிக்கும் விதத்தில் ஐ.நா சபை தீர்மானம் கொண்டு வந்துள்ளது.
இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வட கொரியா மனித உரிமைகள் ஆணையத்தின் இயக்குனரான Kim Yong Ho இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
அப்போது, அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தெரிவானது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு கிம் யோங் ஹோ பதிலளித்தபோது, ‘அமெரிக்காவின் ஜனாதிபதியாக யார் பதவி ஏற்றாலும் எங்களுக்கு கவலையில்லை.
ஆனால், வட கொரியா மீது அமெரிக்க கொண்டுள்ள விரோத கொள்கை முடிவுகளை திரும்ப பெற்றுக்கொள்கிறதா இல்லையா என்பதில் தான் தனது நாடு அக்கறை செலுத்துவதாக’ அவர் அதிரடியாக பதிலளித்துள்ளார்.
வட கொரியாவில் மனித உரிமைகள் மீறல் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அந்நாட்டில் அணு ஆயுத பரிசோதனை நடைபெற்று வருவதால் கடந்த 2006ம் ஆண்டு முதல் அந்நாட்டின் மீது ஐ.நா சபை பொருளாதார தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.